செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

இன அழிப்பு வழக்கை நடத்துவதற்கு நிதி உதவி செய்ய‌

அமெரிக்காவின் குடிமகன் கோத்தபாய ராஜபக்ச என்ற இலங்கை பயங்கரவாத அரசின் பாதுகாப்புச் செயலாளர் ,அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை பெற்ற இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இவர்கள் இருவர் மீதும்,ஒரு குற்றப் பத்திரிகையை, அமெரிக்கத் தலைமை நீதிபதியிடம் "இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள்"(Tamils Against Genocide, TAG) என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை இந்த அமைப்பின் வழக்கறிஞரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வழக்கறிஞருமான புரூஸ் பெயின் தொடர்ந்து உள்ளார்.

எங்குமே பாதுகாப்பற்ற கொலைவலயங்களே சிங்களத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாள் தோரும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.சராசரியாக 15 முதல் 20 பேர் வரை இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்.

இன அழிப்பு வழக்கை நடத்துவதற்கு நிதி உதவி செய்ய‌ விரும்பும் நம் உறவுகள் கீழ்க்கண்ட இணைய பக்கத்திற்கு சென்று உதவுங்கள்.

https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx

எப்போது எரிகணை வந்து விழுமோ என்ற அச்சத்திலும்,சரியான உணவு மற்றும் மருந்து பொருள்கள் இல்லாத காரணத்தாலும் நாள் தோறும் நம் மக்கள் படுகின்ற அவலம் பார்க்க முடியாததாக இருக்கிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

நம்மால் முடிந்த உதவிகளை தாரளமாக செய்வோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற தமிழனுக்கு ஒரு பகிரங்க கடிதம்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியிலும், ஆதிக்கத்திலும் இருந்த சங்கீதத்தை உழைக்கும் மக்களின் இசையாக தமிழகத்தின் தெருக்களில் உலவ விட்டவர் இளையராஜா என்றால்,நீங்கள் சர்வதேச அளவுக்கு உயர்த்திய திற‌மைசாலி.அதற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளீர்கள்.நீங்கள் தமிழன் என்பதனால் பெருமைப்படுவதாக இங்குள்ள ஓட்டு கட்சி தலைவர்களும்,ஊடகங்களும் சேர்ந்து ஒரு சேர வாழ்த்துகிறார்கள்.

காவல்துறை தடியடி, அய்யாவின் உண்ணாவிரதம், அம்மாவின் அர்ச்சனைகள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன.அனைத்து தலைப்பு செய்திகளிலும் தாங்களே.இனி வரும் வாரங்களில் உங்களின் படமே அனைத்து வார இதழ்களின் அட்டைகளிலும் இருக்கும்.தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும்.

தாங்கள் ஒரு தமிழன் அதற்காக மகிழ்கிறோம் என்று இந்த தலைவர்கள், ஊடகங்கள் சொல்வதனாலும், தாங்கள் ஒரு தமிழன் என்பதனாலும், உணர்வுடன் ஒரு கேள்வி.

தாங்கள் ஏன் அன்றாடம் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான தமிழர்களுக்காக ,தாயின் பிணத்தருகே கத‌றியழும்,குழந்தைகளுக்காக, மனைவியையும் குழந்தையும் இழந்து நடைபிணமாக அலையும் ஒரு சக மனிதனுக்காக,பெற்ற குழ‌ந்தை இறந்த பிறகும் புதைக்கவும் முடியாமல்,அழக்கூட முடியாமல் கண்ணீர் வற்றிப்போய் ஓடிக்கொண்டிருக்கும் தாய்மாருக்காக,ஈழத்தமிழருக்காக
தங்களின் "ஆஸ்கார் விருதுகளை ஏன் திரும்ப ஒப்படைக்கக் கூடாது?"

நோபல் பரிசுகளையே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொன்னவர்களை,பெற்ற‌ பரிசுகளை திரும்ப ஒப்படைத்தவர்களை பட்டியலிட்டு விட முடியுமே?

உலக நாடுகளை ஈர்ப்பதற்க்கு இங்கே பல்வேறு வகையில் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. பான் கீ மூனிடம் 2கோடி கையெழுத்து கொடுத்து ஈர்ப்பதை விட,வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம் செய்யும் கவன ஈர்ப்பை விட,பிரான்சில் நடைபெற்ற ஊர்வலத்தின் கவன ஈர்ப்பை விட‌ தங்களின் இந்த செயல் உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்க்கும் என்பது திண்ணம்.வெள்ளை மாளிகை திரும்பிப் பார்க்கும்.ஐ நா சபை உற்று நோக்கும்.ஐரோப்பிய சமூகம் கவனிக்கும்.

ஆதலால் ஏதும் ஈழத்தமிழருக்கு நல்லது நடந்தால் நாங்கள் சொல்வோம் "எல்லா புகழும் ரஹ்மானுக்கே".

"தமிழ் எங்கள் மொழி, இஸ்லாம் எங்கள் வழி" என்று முழக்கமிட்ட காயிதே மில்லத் வாழ்ந்த தமிழ்நாடு இது.

முத்துக்குமரன்,நிலக்கோட்டை பள்ளபட்டி ரவி,சீர்காழி ரவிச்சந்திரன்,சென்னை வண்ணாரப்பேட்டை அமரேசன்,மலேசியா ராஜா,மலேசியா ஜெகனேசன்,ஜெனீவா முருகதாசன்,என்கிற தமிழர்கள் தங்கள் மதிப்பில்லா உயிரையே கொடுத்தார்கள்.

தமிழராகிய நீங்கள் மதிப்புள்ள விருதை திரும்பக் கொடுக்கலாமே?

அப்பொழுதும் நீங்கள் இங்குள்ள உழைக்கும் தமிழர்கள்,ஈழத்தில் உள்ள வ‌தைபடும் தமிழர்கள் மனங்களில் நிரந்தர இடத்தில் இருப்பீர்கள்.

எல்லோரும் உங்களை நன்றியுடன் நினைத்து வாழ்த்துவர்.இதைவிட ஆஸ்கார் விருது என்ன பெரிதா?

யாருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பு.ஏன் நீங்கள் பயன்படுத்தக் கூடாது?

உங்களின் திறமைக்கு,உழைப்பிற்கு, ஏற்கனவே இசை உலகில்,மக்கள் உள்ளங்களில் அங்கீகாரம் கிடைத்து விட்டது.

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு,ஈழ மக்களின் கோரிக்கைகளுக்கு இன்னும் உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

"கையில் கிடைக்கும் அனைத்தையும் கருவிகளாக்குவோம்" என்றான் மாவோ.

உங்கள் கையில் இன்று ஆஸ்கார்.அதனையும் ஒரு ஆயுதமாக்கலாம்.

அது ஒரு ஆயுதமாவதோ,அலங்காரமாவதோ உங்கள் கையில்.

தமிழில் பேசினீர்கள்.தமிழருக்காகவும் பேசலாமே?

எனக்கு விருது வேண்டாம், எனது மக்களுக்கு விடுதலை தாருங்கள் என்று கூறுவீர்களா?

மதம் மாறியதால் சாதிய இழிவை துடைத்தீர்கள்.

மனம் மாறினால் இன அழிவை துடைப்பீர்கள்.

நாங்கள் எவ்வளவோ நம்பியிருக்கிறோம்.இதையும் நீங்கள் செய்வீர்கள் என நம்பும்

-உண்மைத்தமிழன்